உலகச் செய்திகள் செய்திகள்

வெடிவிபத்தால் தரைமட்டமாகியது பெய்ரூட் நகர்

லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் நேற்று இடம்பெற்ற மிகப்பெரிய வெடிவிபத்து சம்பவம் நகரையே உருக்குலைத்து, சின்னாபின்னமாக்கியுள்ளது. சம்பவத்தில் இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4,000 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

வெடிவிபத்தால் பெய்ரூட் நகரிலிருந்த வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் என அனைத்துக் கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. பெரும் போரினான் சிதைவுற்ற நகர் போல பெய்ரூட் நகர் காட்சியளிக்கின்றது. இச் சம்பவத்தில் பெய்ரூட் நகரில் இருந்த ஒரு கோட்டை முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இந்த வெடிவிபத்து நில அதிர்வில் 3.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மத்திய தரைக்கடல் பகுதி முழுவதும் இந்த வெடிவிபத்து சத்தம் கேட்டுள்ளது, ஏறக்குறைய 200 கி.மீ. தொலைவில் உள்ள சைப்ரஸ் நகரத்துக்கும் இந்த சத்தம் கேட்டு, அதிர்வு உணரப்பட்டுள்ளது. கொரோனாப் பிரச்சினை, பொருளாதாரச் சிக்கல் போன்றவற்றில் லெபனான் நாடு திண்டாடிவரும் நிலையில் இந்த வெடிவிபத்து பேரிடியாக அமைந்துள்ளது. இந்த வெடிவிபத்து நடந்தபின் ஏராளமான அம்புலன்ஸ்கள் வீதிகளிலும், வீடுகளிலும் கிடக்கும் உடல்களைக் கொண்டு சென்றவாறு இருந்தன. சிறிது நேரத்தில் வைத்தியசாலைகள் அனைத்தும் நிரம்பியதால், காயமடைந்தவர்களைச் சாலையில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சுங்கத்தினால் கைப்பற்றப்பட்டு துறைமுக களஞ்சியசாலையில் சுமார் 2,750 தொன் அமோனியம் நைட்ரேட் இரசாயனம் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தமையே மிகப்பெரிய வெடிவிபத்துக்கு காரணமாக இருக்கலாம் என லெபனான் ஜனாதிபதி மைக்கல் அவுன் தெரிவித்துள்ளார். துறைமுக களஞ்சியசாலையில் உரிய பாதுகாப்புடன் இரசாயனம் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். இந்த இரசாயனம் 06 வருடங்களாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், அடுத்து ஐந்து நாட்களில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

கொடிகாமம் வாள்வெட்டில் மூவர் படுகாயம்!

P.L

தேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனுக்கள் ஏற்கப்படுமா? – நீதிமன்ற முடிவு நாளை

user user

வருமான நிரல்படுத்தலில் இலங்கை வீழ்ச்சி

P.L

Leave a Comment