செய்திகள் பிரதான செய்திகள்

வரலாற்றில் வாழும் ரவிராஜ்

இன்று ஜூன் 25 ஆம் திகதி மாமனிதர் நடராஜா ரவிராஜின் பிறந்ததினமாகும். அதனையொட்டி இந்த நினைவுக்குறிப்பு பிரசுரமாகின்றது.

பேரினவாதம் பேசி நாட்டையே குழப்பிய இனவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் அமரர் நடராஜா ரவிராஜ், நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் அவர்கள் பேசும் சிங்கள மொழியிலேயே அவர்களை மிரட்டி வைத்தவர். நம்மோடு இருக்க வேண்டிய நேரத்தில் அவர் இல்லாமல் போனது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவர் நம்மத்தியில் இருந்திருந்தால் இன்று ( ஜூன் 25) தனது 58ஆவது அகவையை கொண்டாடி இருப்பார்.

யாழ்.தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் 1987ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் சட்டத் தரணியாக அடிபதித்தார். ஆரம்பம் முதலே அவசரகாலச் சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் என்பனவற்றால் பாதிக்கப்பட்ட நம்மவர்களுக்காக வாதாடியவர் இவரை “மனித உரிமைகள் சட்டத்தரணி” என்றே அடைமொழிக்குள் அழைப்பார்.

1997 ஆம் ஆண்டு தீவிர அரசியலில் நுழைந்த ரவிராஜ் யாழ்.மாநகர சபையின் பிரதி மேயராகவும் தொடர்ந்து 1998 யாழ்.மாநகர மேயராகவும் தெரிவானார். அதன்பின்னர் 2001, 2004 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இளம் உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.

மாமனிதர் ரவிராஜ் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த காலம் வெறும் 5 ஆண்டுகள்தான். எனினும், அக்குறுகிய காலப்பகுதியில் அளப்பரிய பணிகளை அவர் ஆற்றியிருந்தார். இதனை எல்லோரும் அறிவர். எத்தகைய வேலைப்பளு இருந்தாலும் மாதாந்தம் சாவகச்சேரியிலுள்ள அவரது இல்லமான ராஜ் அகத்தில் திரளும் மக்களைச் சந்திப்பதற்கு அவர் ஒருபோதும் தவறியதில்லை.

மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்வதுடன், பிரதேசத்திலுள்ள கல்விமான்களதும், முதியோர்களதும் ஆலோசனைகளைச் செவிமடுத்து அதன்வழியே, தனது பணிகளைச் செய்து வந்தார். இன்னொரு ஹிரோஷிமா என ரணில் விக்கிரமசிங்கவினால் வர்ணிக்கப்பட்ட அழிந்து போன சாவகச்சேரி நகரத்தை மீளக் கட்டியெழுப்புவதிலும், தென்மராட்சிப் பிரதேசத்தில் மக்களை மீள்குடியேற்றுவதிலும் முன்னின்று உழைத்தார். துன்பப்படுவோருக்குத் தானாகவே முன்வந்து உதவும் பண்பைக் கொண்டிருந்தார். இதனால் தான் அவர் குறுகிய காலத்திலேயே எல்லோராலும் விரும்பப்படும் ஒரு தலைவரானார்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையும், அதற்கான நியாயங்களையும் மக்கள் அனுபவித்துவந்த சொல்லொணாத் துன்பங்களையும் சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்துக்கும் உரிய முறையில் கொண்டு சென்றார்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் அவற்றினை மிக லாவகமாகக் கையாண்டு தனது கருத்துக்களைக் கேட்போர் மனதில் உறைக்கவும், உணரவும் வைத்தார். தமிழர் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் உள்நாட்டு, வெளி நாட்டு ஊடகங்களைச் செம்மையான முறையில் பயன்படுத்தினார். குறிப்பாகச் சிங்கள ஊடகங்களை மிகச் செம்மையான முறையில் பயன்படுத்தி தமிழர் போராட்டத்தின் நியாயங்களையும், தமிழர் தாயகத்தின் உண்மை நிலைமைகளையும் உடனுக்குடன் சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறினார்.

இவரது இந்தப் பணிதான் அவரது உயிரைப் பறிப்பதற்குரிய முதன்மைக் காரணியாக இருந்தது எனப்பரவலாகக் கருதப்படுகின்றதுது.தெற்கிலுள்ள சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்கள் அவரை விடுதலைப் புலியாகவே கருதினர். தமிழர் உரிமைக்காகப் போராடுபவர்கள் சிங்கள மக்களின் விரோதிகள் என்ற சிங்கள கோட்பாட்டாளரின் கூற்றைப் பொய்யென்று சிங்கள ஊடகங்களினூடாக எடுத்துக்கூறி, இனங்களுக்கிடையிலான நல்லுறவை ரவிராஜ் வளர்த்து வந்தார்.இறுக்கமான அரசியல் சூழ்நிலையிலும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் பாதையில் தனக்கேயுரித்தான ஆளுமையுடன் ஒரு ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்து, போராடும் வல்லமையை அவர் கொண்டிருந்தார்.

மனித உரிமைகள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்த ரவிராஜ் மனித உரிமை அமைப்புகளில் இணைந்து இலங்கையிலுள்ள சகல மக்களதும் உரிமைக்காகக் குரல் கொடுத்து வந்தார்.
இந்தநிலையில், நவம்பர் 10, 2006 வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ரவிராஜ் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் அவர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார்.

தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருதை ரவிராஜுக்கு வழங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கௌரவித்துள்ளார்.
இப்போது ரவிராஜ் உயிரோடிருந்திருந்தால் எமக்கு நல்லதொரு அரசியல் தலைமையை வழங்கியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

சத்திய இலட்சியத்துக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திரநாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள் . அதேபோன்று தமிழர் வாழ்விலும் வரலாற்றிலும் ரவிராஜ் என்றும் நிலைத்திருப்பார் .

-இரா.புத்திரசிகாமணி-

Related posts

கொரோனா தொற்று 915 ஆக அதிகரிப்பு

P.L

வருமான நிரல்படுத்தலில் இலங்கை வீழ்ச்சி

P.L

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை!

P.L

Leave a Comment